பிரான்சில் பல்லின மக்களின் முன்னிலையில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமான ஈருருளிப்பயணம்!

18224 0

தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தலுடன் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய மாபெரும் பொங்கு தமிழ் பேரணியை முன்னிட்டும் அதற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரான்சில் இருந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் ஈருருளிப்பயணம் 03.09.2018 திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா நெதர்லாந்து ஜேர்மனி பெல்ஜியம் பிரான்சு . இத்தாலி, நோர்வே, டென்மார்க் சுவீடன் போன்ற நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டம் ஈருருளிப் பயணம், மற்றும் நிழற்படக்கண்காட்சி போராட்டம் நடைபெறும் அதேவேளையில் 01.09.2018 பிரித்தானியாவிலிருந்து ஈருருளிப்பயணப்போராட்டம் ஆரம்பித்துள்ள நிலையில் இன்று பிரான்சு பாரிசிலிருந்து மூவர் 890 கிலோ மீற்றர் தூரம் ஜெனீவா வரை ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

காலை 9.30 மணிக்கு ஆர்ஜெர்ந்தே பிரதேசத்தில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுக்கல்லின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் ஆகியோர் ஈருருளிப்பயணம் தொடர்பாக உரை நிகழ்த்தியிருந்தனர். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனக் கேட்கப்பட்டதுடன், ஈருருளிப் பயண உணர்வாளர்களின் சாத்வீகப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர். ஈருருளிப் பயணத்தினை மேற்கொள்ளும் உணர்வாளர்களின் சார்பில் உரை நிகழ்த்தியிருந்த பிரான்சு இளையோர் அமைப்பு உறுப்பினரான தவராஜா திவாகரன் அவர்கள், நாம் மேற்கொள்ளும் போராட்டமானது தாயகத்தில் எமது சகோதரர்கள் முன்னெடுத்த போராட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் சிறிதாகவே இருக்கின்றது. என்னைப்போன்ற இளைஞர்கள் இவ்வாறான போராட்டங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அத்துடன், ஆர்ஜெந்தை மக்கள் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களுக்கு தம்மால் இயன்ற பண உதவிகளையும் வழங்கியதுடன், சிற்றுண்டியும் தேநீரும் வழங்கி ஈருருளிப்பயணம் சிறப்பிக்க வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் 11.00 மணிக்கு பிரெஞ்சு நாடாளுமன்றம் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏனைய நாட்டு விடுதலை அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பிரெஞ்சு நாட்டு அதிபருக்கான மனு கையளிக்கப்பட்டது. சிறப்புரைகளைத் தொடர்ந்து, ஈருருளிப் பேரணி உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் எமது மக்கள் பலரும் கலந்துகொண்டு ஈருருளிப் பயணப்போராட்ட உணர்வாளர்களை வாழ்த்தி வழியனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து மதியம் 14.00 மணிக்கு Ivry-sur-Seine நகர மண்டபத்தில் (Mairie)துணை நகரபிதாவிடம் ஈருருளிப்பயண உணர்வாளர்களினால் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டதுடன் எமது போராட்டம் பற்றி ஈருருளிப்பயணம் மேற்கொள்ளும் உணர்வாளர்களால் நகரமண்டப உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வைத்து Ivry தமிழ் சங்கத்தினால் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது.

தொடர்ந்து ஈருருளிப்பயணம் பிற்பகல் 15.30 மணிக்கு Choisy-le-Roi நகர மண்டபத்தை அடைந்து அங்கு ஈருருளிப்பயண உணர்வாளர்களினால் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டதுடன் எமது போராட்டம் பற்றி ஈருருளிப்பயணம் மேற்கொள்ளும் உணர்வாளர்களால் நகரமண்டப உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஈருருளிப்பயணம் பிற்பகல் 17.30 மணிக்கு Evry courcouronnes நகர மண்டபத்தை அடைந்து அங்கு துணை நகரபிதாவிடம் ஈருருளிப்பயண உணர்வாளர்களினால் போராட்டத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டதுடன் எமது போராட்டம் பற்றி ஈருருளிப்பயணம் மேற்கொள்ளும் உணர்வாளர்களால் நகரமண்டப உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து Evry தமிழ்ச்சங்கத்தினர், ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களுக்கு தம்மால் இயன்ற பண உதவியை வழங்கியதுடன், மாலை நேர சிற்றுண்டியும் தேநீரும் வழங்கி ஈருருளிப்பயணம் சிறப்பிக்க வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

ஒவ்வொரு நகர மண்டபத்திலும் ஈருருளிப்பயணத்தை வரவேற்ற நகரமண்டப துணைநகர பிதா மற்றும் உறுப்பினர்கள் எமது போராட்டத்தின் நோக்கத்தை கேட்டறிந்து, உணர்வோடு வாழ்த்தி வழியனுப்பிவைத்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாளை 04.09.2018 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு தொடரவுள்ள ஈருருளிப்பயணம் Savigny le temple நகரமண்டபம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கூடாகப் பயணிக்கவுள்ளது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் ஈருருளி பயண உணர்வாளர்கள் தங்கள் இடங்களுக்கு வரும்போது அதிக அளவில் திரண்டு வந்து அவர்களின் பயணத்திற்கு வலுச்சேர்க்குமாறு உணர்வாளர்கள் கேட்டுள்ளனர்.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

 

Leave a comment